
பாழையில் துளி
பதநீர் தித்தம் தர
பனையேறி செஞ்சி
கசியும் ரத்தம் ...
சிற்பியாய் இவன்
சீவுவான் பாழை ..
சிந்துகின்ற வேர்வை
வடிந்தோடும் பனை ஓலை
முறுக்கு தடி , பாழைகடி
பழைய கலயம் அருவாள்
இத்தியாதி..
இவை சுமக்கும்
இவனோ அந்த குகன் ...
பாழை அருவாள் போன்று
கூரானவன் ...
பாசத்திற்கு கட்டுப்படும்
அனுமார் இவன் ...
முறம் கொண்டு புலியை
புறம் கொள்ள செய்த
என் சகோதரி ...
கருப்புகட்டியை இனிக்க
கூப்பனியோடு
கொதித்து கொண்டிருக்கிறாள் ...
கலயம் நிறையாது ..
கவலை நிறைந்த வாழ்க்கை ...
உயரம் ஏறும் தொழில்
உயரவில்லை இன்று ...
கட்டுமரம் கட்டி கடலுக்கு
சென்று நிச்சமற்ற வாழ்வு
நிரந்தரமாய் கொண்ட
மீனவ நண்பன் இவன் ...
பாக்கெட்டில் பதனி
பதனிட்ட நுங்கு
பைப்ரௌஸ் உணவாம்
பனங்கிழங்கு
இதனையும் தர இவனுக்கு
உண்டு சக்தி ...!
எத்தனை தொழில் நுட்பம்
எத்தனை மதி நுட்பம் ... அய்யா ..!
விதியின் விற்பன்னர்களே ..!
இவன் தலை விதி மாறுமா ..?