Thursday, March 18, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 517:

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்

மு .வ உரை:

இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.

என் குத்து மதிப்புரை
வார்டு தோறும் வாக்களர் எண்ணிக்கை
நோட்டுக்கு எத்தனை வோட்டு
அத்தனையும் கணக்கிலிட்டு
வேட்பு மனு தாக்கலிருந்து..
வெற்றி விழா வரை
உடல் வழியின்றி
உக்கார்ந்த இடத்தில் முடிப்பவனுக்கே ..
அப்பணியை தருதல் சிறந்தது

Sunday, March 14, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 408:

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

கலைஞர் உரை:
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


மு.வ உரை:
கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.


சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.


என் குத்து மதிப்புரை
கைநாட்டு கையில கரன்சி நோட்டு
கற்றவன் (பண)கஷ்ட்டத்தை காட்டிலும் மிக தொல்லை தரும்

குறளும் குத்து மதிப்பும் -குறள் 402:

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.

கலைஞர் உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.


மு.வ உரை:
எண் (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.


சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவன் கற்றவர் அவையில் பேச ஆசைப்டுபடுவது, இரு முலையும் வளர்ச்சி பெறாத பெண் ஒருத்தி தாம்பத்திய உறவு கொள்ள ஆசைப்பட்டது போலாம்.

என் குத்து மதிப்புரை
கன்னி ஒருத்தி
கைக்குழந்தை அழுக்கை போக்க
தாய்பால் கொடுக்க முயற்சிப்பது போல்

குறளும் குத்து மதிப்பும் -குறள் 958:

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.

கலைஞர் உரை:
என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும்.


மு.வ உரை:
ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.


சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்திலிருந்து வருகின்றவனிடம் அன்பு இல்லாது இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவன் தானா என்று அவனை இந்த உலகம் சந்தேகப்படும்.


என் குத்து மதிப்புரை
பில்டிங்கு ஸ்ட்ராங்கு
பேஸ்மென்ட் கொஞ்சம் வீக் எனும்
கட்டடங்கள் உங்கள் நிலத்தில் ஒரு
பேயிங் கெஸ்ட் (paying guest)

குறளும் குத்து மதிப்பும் - குறள் 1173:

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.


கலைஞர் உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன. இது நகைக்கத்தக்க ஒன்றாகும்.


மு.வ உரை:

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.


சாலமன் பாப்பையா உரை:

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.


என் குத்து மதிப்புரை
காதலுக்கு வித்திட்ட கண்கள் அதை இன்று கண்ணீர் ஊற்றி வளர்கின்றனவோ ...

Saturday, March 13, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.


கலைஞர் உரை:
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.


மு.வ உரை:

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.


சாலமன் பாப்பையா உரை:

உழுத மண்ணை, ஏறத்தாழ 35 கிராம் புழுதி, 8.75 கிராம் புழுதி ஆகும்படி காய விட்டுப் பிறகு பயிர் செய்தால் ஒரு கைப்பிடி அளவு எருவும் இடாமலேயே கூட அந்தப் பயிர் அதிகம் விளையும்.


என் குத்து மதிப்புரை
என்ன ஒரு இரத்தின சுருக்கமான உரை .
விவசாய கல்லுரி மாணவன்
"சாகுபடியை பெருக்க என்ன வழி முறை?"
என்றால் இதை பிட்டெழுதி எடுத்துகிட்டு
போனா முழு மதிப்பெண் கிடைச்சுவிடும்

குறளும் குத்து மதிப்பும் குறள் எண்160:

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

கலைஞர் உரை:
பசி பொறுத்து உண்ணாநோன்பு இருக்கும் உறுதி படைத்தவர்கள் கூடப் பிறர் கூறும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, அடுத்த நிலையில்தான் வைத்துப் போற்றப்படுவார்கள்.


மு.வ உரை:
உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.


சாலமன் பாப்பையா உரை:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.


என் குத்து மதிப்புரை :
"தட்டுல சாதம்
போடும் முன்னே -கழுத!
உன் கச்சேரியும் ஆரம்பம்" என
நீயும் வேணாம்
உன் சோறும் வேணாம் என
வயித்தில் ஓடும்
ஓணானோடு திண்ணையில்
பட்னி கிடக்கும் விருமாண்டியை காட்டிலும்
தினமும் நடக்கும் கச்சேரி என
தின்னு முடிச்சு தட்டில் முகம்

காணும் கணவனே சிறந்தவன்

Friday, March 12, 2010

குறளும் குத்து மதிப்பு -குறள் 260:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.

கலைஞர் உரை:
புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக் கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும்.


மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.


சாலமன் பாப்பையா உரை:
எந்த உயிரையும் கொல்லாதவனாய், இறைச்சியைத் தின்ன மறுத்தவனாய் வாழ்பவனை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.


என் குத்து மதிப்புரை
ஊரைக் கூட்டி நீ
கும்பிடும் குரு
மான் தோல் உடுத்தி
புலித்தோல் மீது
அமராது தரிசனம் தந்தால்
அவர் கரிசனத்திற்கு
வன விலங்குகளும் அவரை
வணங்கும் எந்நாளும் ..
..

Thursday, March 11, 2010

குறளும் குத்து மதிப்பும் குறள் 134:

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கலைஞர் உரை:
பார்ப்பனன் ஒருவன் கற்றதை மறந்துவிட்டால் மீண்டும் படித்துக் கொள்ள முடியும்; ஆனால், பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்கத்திலிருந்து அவன் தவறினால் இழிமகனே ஆவான்.


மு.வ உரை:
கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.


சாலமன் பாப்பையா உரை:
பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.


என் குத்து மதிப்புரை
கல்லறையில் போறவன்
கற்பககிரகத்தில் ஆடிய
ஆட்டம் ...
நாசக்கரா !
நாத்திகனின் நகைப்புக்கு
ஆளாக்கிவிட்டாயே என
காத்ததோணும்

குறளும் குத்து மதிப்பும் - குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

கலைஞர் உரை: என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

மு.வ உரை: என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை: என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

என் குத்து மதிப்புரை
வாங்குகிற பொருளுக்கெல்லாம்
warrenty உண்டு மாத கணக்கில் -இந்த
வரதட்ஷ்ணையில் வந்தவருக்கோ
ஒரு கேரண்டியும் இல்லை வருடகணக்கில்
" Use and throw " என்று
உதறி தள்ள இவரோன்றும்
சைனா சாமான் அல்ல
எங்க நாயின வாங்கி தந்த மாப்பிள்ளை

Wednesday, March 10, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 927:

அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.


கலைஞர் உரை:
மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.


மு.வ உரை:

கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.


சாலமன் பாப்பையா உரை:

போதைப் பொருளை மறைந்திருந்து பயன்படுத்தி மயங்குபவரை ஊருக்குள் வாழ்பவர் அறிந்து எப்போதும் இகழ்ந்து சிரிப்பர்.


என் குத்து மதிப்புரை
ஒரு குவாட்டர் அடிச்சு

இவன் எடுத்த வாந்தி
இவனுக்கு மட்டும் தெரியும்
யாருக்கும் தெரியாது.....
ஒரு full அடிச்சு
இவன் எடுத்த வாந்தி
ஊருக்கே தெரியும்
இவனுக்கு மட்டும் தெரியாது ...

Sunday, March 7, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் 319:

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

கலைஞர் உரை:
பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

மு.வ உரை:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர்க்குத் தீமையைக் காலையில் செய்தால், நமக்குத் தீமை நம்மைத் தேடி மாலையில் தானாக வரும்.

என் குத்து மதிப்புரை
காலையில் அடுத்தவன்
காலை வாரிவிட்டால் ..
மாலையில் மாலையோடு
வரமாட்டன் ..
வாளை எடுத்து வருவான் உன்
வாலை நாறுக்க

குறளும் குத்து மதிப்பும் - குறள் 181

அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.



மு.வ : ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

சாலமன் பாப்பையா : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது

என் குத்து மதிப்புரை
ஒண்ணுமே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை
"போட்டு கொடுக்க " கூடாது ..

குறளும் குத்து மதிப்பும் -குறள் 58:

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

கலைஞர் உரை:
நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.

மு.வ உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்

பாப்பையா உரை:
பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள்.


என் குத்து மதிப்புரை
இணைந்து வாழ்ந்தால் பூவுலகில் சொர்க்கம்
இறந்த பின்பும் மேலோகதிலும் சொர்க்கம்

Saturday, March 6, 2010

குறளும் குத்து மதிப்பும் -குறள் எண்- 116:


கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

கலைஞர் உரை:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்.

மு.வ உரை:

தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.

குத்து மதிப்புரை
யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
கேடு வரும் முன்னே மதி கெட்டு வரும் முன்னே

குறளும் குத்து மதிப்பு - குறள் 471:

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

கலைஞர் உரை: செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈ.டுபட வேண்டும்.

மு.வ உரை: செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை: செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

என் குத்து மதிப்புரை:
எதிர்க்கட்சி , கூட்டணி கட்சி,
தன்கட்சி அதன் உட்கோஷ்டி..
எல்லாத்தையும் ஆராயிந்து ...
டெப்பாசிட் இழக்க
ஒரு இழிச்சவாயன்
வேட்பாளர் கிடைக்காத நிலையில்
தேர்தலில் யாருக்கும்
ஆதரவு இல்லை என்று
தேர்தலை புறக்கணிக்கலாம்

Friday, March 5, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 1247: )

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே

யானோ பொறேன்இவ் விரண்டு.

கலைஞர் உரை:
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது.

மு.வ உரை:

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விடு; இரண்டையுமே விடமுடியாது என்பது உன் எண்ணம் என்றால், ஒன்றிற்கொன்று வேறுபட்ட இந்த இரண்டையும் சேர்த்துத் தாங்கும் ஆற்றல் எனக்கு இல்லை.

குத்து மதிப்புரை
முட்டையும் உடைய கூடாது ...ஆம்லெட்டும் சாப்பிடணும் ..ரெண்டும் எப்படி கண்ணு ..சரியாத வெளங்காத ..கூமுட்டை புள்ள நீ ..!

Thursday, March 4, 2010

'மெகா ஹிட் திரை படம் "

ஓயாமல் உச்சரிக்கும்
உன் பெயர் ..கவிதை
உன் முகம் காட்டும்
ஜன்னல் .. சின்ன திரை
நீ அசைந்து வரும்
காட்சி - குறும்படம்
கனவில் உன் தோன்றல்
களவாட முடியாத குறுந்தகடு
எப்பவும் நீயே
என் 'மெகா ஹிட் திரை படம் "

குறளும் குத்து மதிப்பும் (குறள் 834:)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.

கலைஞர் உரை:
படித்தும், படித்ததை உணர்ந்தும், உணர்ந்ததைப் பலருக்கு உணர்த்திடவும் கூடியவர்கள், தாங்கள் மட்டும் அவ்வாறு நடக்காமலிருந்தால் அவர்களைவிடப் பேதைகள் யாரும் இருக்க முடியாது.


மு.வ உரை:
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.


சாலமன் பாப்பையா உரை:
படித்தும், படித்தவற்றை உணர்ந்தும், மற்றவர்க்குச் சொல்லியும், அவற்றின்படி வாழாதவரைக் காட்டிலும் அறிவற்றவர் வேறு இல்லை.


என் குத்து மதிப்பு

'கழிப்பிடத்திற்கு வெளியே
கழிக்காதே சிறுநீர்'
என்ற வாசகம்
சுமந்து நிற்கும்
சுவர் மீதே ..அதை
வசித்து கொண்டே
காரியம் முடிக்கும்
கயவான்கள் -இதில்
கால்நடை காட்டிலும்
"கழிசல்கள் "

Wednesday, March 3, 2010

குறளும் குத்து மதிப்பும் (குறள் 271 )

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.


கலைஞர் உரை:
ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும்.


மு.வ உரை:

வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.


சாலமன் பாப்பையா உரை:

வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.


என் குத்து மதிப்பு
"கதவைத் திறந்து விடுங்கள்
காற்று வரட்டும் " என
ஒழுக்க சீலர் போல்
ஊரெங்கும் உபதேசம் ...
அறையில் புரியும் இவரின்
அந்தரங்க லீலையாவும்
ஊடகம் வழி
உலகத்தை சிரிக்க வைக்கும்